×

பிரிந்த தம்பதி இணைய அருள் தரும் நாகநாதர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது நயினார்கோவில். இங்கு பழமையான சவுந்திரநாயகி சமேத நாகநாதர் கோயில் உள்ளது. மூலவராக நாகநாதர் என அழைக்கப்படும் சிவன் உள்ளார். விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சுந்தரராஜப்பெருமாள், மகாலெட்சுமி சந்நதிகள் உள்ளன. கோயிலில் கொடி மரம் உள்ளது. தல மரங்களாக வில்வம், மருதம் மரங்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. தல வரலாறு இந்த கோயிலை கட்டியவர், கட்டிய ஆண்டு குறித்து சரிவர விபரங்கள் தெரியவில்லை. பண்டைய காலத்தில் திருமருதூர் என அழைக்கப்பட்ட நயினார்கோவிலில் சவுந்திரநாயகி சமேத நாகநாதர் கோயில் இருந்தது. புராண காலத்தில் திரிசங்கு என்ற மன்னர், பூத உடலுடன் சொர்க்கம் செல்ல விரும்பி, தனது ஆசையை  வசிஷ்டரிடம் தெரிவித்தார். ஒரு வருடம் தொடர்ந்து வேள்வி நடத்தினால், தேவர்களே நேரில் வந்து உன்னை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வார்கள் என மன்னரிடம் வசிஷ்டர் தெரிவித்தார். இதற்கு வசிஷ்டர் மறுத்தார்.

தொடர்ந்து விசுவாமித்திரரை சந்தித்த திரிசங்கு தனக்கு சாபவிேமாசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். திரிசங்குவின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பிய விசுவாமித்திரர், வசிஷ்டரின் சீடர்களிடம் வேள்வி நடத்த உதவும்படி வேண்டினார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த விசுவாமித்திரர், அவர்களை வேடர்களாக மாற்றி சாபமிட்டார். விசுவாமித்திரர் சாபத்தின்படி வேடர்களாக மாறிய சீடர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு வனப்பகுதிகளில் வாழ்ந்தனர். வனவாசம் முடிந்த பின்னர் மருதூருக்கு வந்த அவர்கள், அங்கு நாகநாத சுவாமியை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர் என்பது வரலாறு. பண்டைய காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னன் முல்லா சாகிப், வாய் பேச முடியாத தனது மகளை நாகநாத சுவாமி கோயிலுக்கு அழைத்து வந்தார். அங்கு மூலவர் சன்னதியில் முல்லா சாகிப்பின் மகள் பேச துவங்கினாள். இதனை கண்டு மகிழ்ந்த முல்லா சாகிப் “நீரே நயினார் நிஜம் தெரிந்தேன்” என கூறி நாகநாதரை போற்றி பூஜித்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் மருதூர் என்ற பெயர் மறைந்து நயினார்கோவில் என வழங்கப்பட்டது. இந்த கோயிலுக்கு இன்றும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கோயிலில் பச்சை வண்ணத்தில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி, தைப்பூசம், வைகாசி, ஆடிப்பூரம், பெரிய கார்த்திகை, நவராத்திரி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். குழந்தைப் பேறு வேண்டி இங்கு ஏராளமான தம்பதிகள் வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கருத்து வேறுபாட்டால் பிரிந்து மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் தம்பதியர், பழைய மாங்கல்யத்தைக் சுழற்றி உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். பின்னர் புதிதாக செய்த மாங்கல்யத்தை மூலவர் சன்னதியில் மனைவியின் கழுத்தில் கணவர் கட்டுகிறார். மூலவர் முன்பு மாங்கல்யம் அணிவதால் எந்த காரணத்தாலும் தம்பதியர் மீண்டும் பிரிய மாட்டார்கள் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

Tags : Ramanathapuram, Naganathar
× RELATED திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!